தமிழக செய்திகள்

மாநில அளவிலான கபடி போட்டி

மாநில அளவிலான கபடி போட்டி

உடுமலை,

உடுமலை அருகே உள்ள எஸ்.வி.புரத்தில் சேரன் கபாடிக்குழுவின் சார்பில் 32-ம்ஆண்டு மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. இதற்காக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட்டு மேற்கூரை வேயப்பட்டது. போட்டிகள் பகலிலும், இரவில் மின் ஒளியிலும் நடந்தது. இந்த போட்டிகளுக்காக விளையாட்டு மைதானத்தில் தரை விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகள் 85 கிலோ எடை பிரிவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கபடி விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் வந்திருந்தனர்.

ஆண்களுக்கான போட்டிகளில் 80அணிகளும், பெண்களுக்கான போட்டிகளில் 30அணிகளும் என மொத்தம் 110 அணிகள்கலந்து கொண்டன. நேற்று முன்தினம் இரவு போட்டிகள் தொடங்கியது.போட்டிகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் லதா என்கிற காமாட்சி அய்யாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகள் நேற்று நள்ளிரவு வரை நடந்தது.

போட்டிகளைக்காண பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை எஸ்.வி.புரம் சேரன் கபடிக் குழுவினர் செய்திருந்தனர்.