தமிழக செய்திகள்

முற்கால பாண்டிய மன்னர் கால நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

கமுதி அருகே முற்கால பாண்டிய மன்னர் கால நடுகல் சிற்பம் கண்டடுக்கப்பட்டு உள்ளது.

கமுதி, 

கமுதி அருகே முற்கால பாண்டிய மன்னர் கால நடுகல் சிற்பம் கண்டடுக்கப்பட்டு உள்ளது.

பழமையான சிற்பம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட, முஷ்டக்குறிச்சி கிராமத்தில் பழமையான நடுகல் சிற்பம் ஒன்று இருப்பதாக வரலாற்று ஆர்வலர் சக்திபாலன் என்பவர் வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆய்வாளர் செல்வம், தேவாங்கர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் நேரில் சென்று அந்த சிற்பத்தை ஆய்வு செய்தனர்.

பாண்டிய மன்னர் காலம்

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- இந்த நடுகல் சிற்பமானது முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்ததாகும். ஒரே பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிக்கும் கலாசாரம் தெற்கில் பாண்டிய நாட்டிலும், வடக்கில் பல்லவ நாட்டிலும் பரவி இருந்தது.

இந்த நடுகல் அரச மகளிர் அல்லது ஒரு உயர் குடி பெண்ணிற்காக எடுக்கப்பட்டதாகும். பெண்ணின் உருவம் வலது கையில் ஏதோ பொருள் ஒன்றை வைத்துள்ளது போல் செதுக்கப்பட்டு உள்ளது. சிற்பம் சிதைவடைந்த நிலையில் இருப்பதால் அது என்ன பொருள் என்று தெளிவாக தெரியவில்லை.

அரவணைப்பு

அவரின் இடது கை அவரது குழந்தையின் தலையில் கை வைத்து அரவணைப்பது போல் உள்ளது. அவரின் வலது கைக்கு கீழே பெண்மணி ஒருவர் கையில் சாமரம் வீசுவது போல சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது. அரச மகளிர் அல்லது உயர்குடி பெண்களுக்குத்தான் இது போன்ற சிற்பங்கள் வடிப்பது வழக்கம்.

இவரின் கணவர் போரில் இறந்து இருக்கலாம் அல்லது இவரும், இவரது குழந்தையும் ஏதேனும் நோயினால் இறந்து இருக்கலாம். அதனால் தான் இவருக்கும், குழந்தைக்கும் மட்டும் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது. சிற்பத்தை சுற்றிலும் அழகான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டு உள்ளது.

கடமை

இந்த சிற்பத்தின் உயரம் 2 அடி, அகலம் 1 அடி. இந்த சிற்பத்தின் காலம் 9 முதல் 10-ம் நூற்றாண்டாக இருக்கலாம். இதுபோன்ற முற்கால பாண்டியர் சிற்பம் மிகவும் அபூர்வ மாகும். இவற்றை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்