கன்னியாகுமரி,
'குமரியின் குற்றாலம்' என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த அருவிக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக, திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 10 நாட்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், அருவிக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. தற்போது திற்பரப்பு அருவியில் நீர்வரத்து சீராக வந்துகொண்டிருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு 10 நாட்களுக்குப் பிறகு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே தொடர் விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.