தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு: ‘ஸ்டெர்லைட் நிறுவனம், விதிகளை பின்பற்றுவது இல்லை’ ஐகோர்ட்டில் தமிழக அரசு குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் நிறுவனம் விதிகளை பின்பற்றுவது இல்லை எனவும், இந்த ஆலையால் தூத்துக்குடியில் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இதில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டு வருகிறார். நேற்று அவர் தனது வாதத்தில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால், முன்னெச்சரிக்கை கொள்கை அடிப்படையில் அந்த ஆலையை மூட அரசு உத்தரவிட்டது. தூத்துக்குடியில் நிலத்தடி நீரையும், காற்றையும் இந்த ஆலை பெரிய அளவில் மாசுபடுத்தி விட்டது. அப்படி மாசுப்படுத்தவில்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டியது அந்த ஆலையின் பொறுப்பு.

ஆய்வு அறிக்கைகள்

ஸ்டெர்லைட் ஆலை கடந்த 1996-ம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் அதிக அளவிலான மாசு ஏற்படுத்தி வருகிறது. இது பல்வேறு ஆய்வு அறிக்கைகள் மூலம் நிரூபணமாகியுள்ளன. 2005-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பின்னர் மாசு அளவு அதிகரித்தது.

1996-ம் ஆண்டு அக்டோபரில் ஆலையை இயக்க நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்த வழக்கில், கழிவுகள் முறையாக, நவீன தொழில் நுட்பம் கொண்டு பராமரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

ஆனால், இதை ஏற்காத ஐகோர்ட்டு, ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி அமைப்பான நீரிக்கு உத்தரவிட்டது. அதன்படி நீரி ஆய்வு செய்து 1998-ம் ஆண்டு, 2005-ம் ஆண்டு என 2 அறிக்கைகளை தாக்கல் செய்தது. இந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு, மாசு ஏற்படுத்துவதை உறுதி செய்து, ரூ.100 கோடியை ஸ்டெர்லைட் ஆலைக்கு அபராதம் விதித்தது.

விதிகளை பின்பற்றுவது இல்லை

தூத்துக்குடி நகரத்தை சரி செய்ய முடியாத அளவுக்கு கடுமையான பாதிப்பை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. அப்படி இருந்தும், மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியை அந்த ஆலை நிர்வாகம் தொடர்ந்து பாடி வருகிறது.

ஆலை கழிவு குட்டையில் சல்பான், சல்பைடு, மெக்னீசியம் போன்ற வேதிப் பொருட்களின் அளவு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்ததை அளவை விட அதிகமாக இருந்ததை ஆய்வறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

ஸ்டெர்லைட் நிறுவனம் விதிகளை பின்பற்றுவது இல்லை. அந்த ஆலையை மூடும்போது எல்லாம், ஒவ்வொரு முறையும் சில நிபந்தனைகளை மட்டும் பூர்த்தி செய்துவிட்டு, நீதிமன்றத்தில் ஆலையை திறக்க அனுமதி பெற்று விடுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்தான் தற்போது ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இவரது வாதம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெற உள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை