தூத்துக்குடி,
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் கடந்த 22ந்தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ஆலையின் வாயிலில் அதற்கான ஆணையும் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனால் தமிழக அரசு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும் பல்வேறு போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் 2 மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என ஸ்டெர்லைட் சி.இ.ஓ. ராம்நாத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, ரூ.100 கேடி மதிப்பில் சமூக நலத்திட்டங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும். 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
ஒரு பள்ளி, ஒரு மருத்துவமனை திறக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று புதிய நிபந்தனைகளை நிறைவேற்றுவோம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற நேரம் உள்ளது எனவும் அவர் அறிவித்துள்ளார்.