வேலூர்,
பஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலூர் ஓட்டேரியில் உள்ள அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்தது.
இதனால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இந்த நிலையில் பகல் 11 மணி அளவில் மாணவர்கள் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.
தண்ணீர் பாக்கெட்டுகள் வீச்சு
அப்போது அந்த வழியாக வந்த பஸ் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை போராட்டம் நடந்த இடத்தில் இருந்து யாரோ வீசியதாக கூறப்படுகிறது. அந்த தண்ணீர் பாக்கெட்டுகளில் உள்ள தண்ணீர் சிதறி பெண் போலீசார் மீது விழுந்தது. இதனையடுத்து மாணவர்களை போலீசார் கண்டித்தனர்.
அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி ஒருவர் பேசினார். அவரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது வாக்குவாதம் முற்றியது. மாணவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர்.
போலீஸ் தடியடி
ஆனால் அதன்பின்னரும் மறியல் தொடர்ந்ததால் மாணவ, மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனையடுத்து மாணவ-மாணவிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஒரு சில மாணவர்களை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கி வெளியேற்றினர்.
தடியடியில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். மாணவிகளும் பயந்து அருகில் உள்ள கடைகளுக்குள் ஓடிச் சென்றனர். ஆனால் கடைகளுக்குள் புகுந்து அவர்களை போலீசார் வெளியேற்றி விரட்டினர். மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துச் சென்று ஓடும்போது சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
போலீஸ் ஏட்டு காயம்
போலீசார் தடியடி நடத்தியபோது போலீஸ் ஏட்டு ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வீசிய கல் அவர் மீது விழுந்ததா? அல்லது கீழே தவறி விழுந்ததால் காயம் அடைந்தாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக சாலை மறியலில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஆம்புலன்சிற்கு மாணவ, மாணவிகள் வழிவிட்டனர். ஆம்புலன்ஸ் சென்ற அடுத்த நொடியே மீண்டும் சாலையில் அமர்ந்து கொண்டனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக கல்லூரிக்கு வருகிற 2-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
119 பேர் கைது
இதேபோல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதை தடுப்பதற்காக கல்லூரி பகுதியில் ஏராளமான போலீசார் நேற்று குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி வளாகத்தில் கூடி நின்றனர். இவர்கள் கல்லூரியில் இருந்து வெளியே சென்று போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க கல்லூரி வாசலில் போலீசார் கயிற்றை கட்டினர்.
இதனால் மாணவர்கள்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மாணவர்கள் கயிற்றை அறுத்துக்கொண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 8 மாணவிகள் உள்பட 119 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.