சென்னை,
சென்னை பாண்டிபஜார் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அலுவலகம் மீது நள்ளிரவில் சில மர்ம நபர்கள் சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. கார் கண்ணாடியும் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து ஜெ.தீபா நேரடியாகச் சென்று பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் ஜெ.தீபாவின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரனின் தூண்டுதல் காரணமாக தாக்குதல் நடந்து உள்ளது என புகார் தெரிவித்தார்.
டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். என்னுடைய பேரவையின் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளராக இருந்தவரை நான் சமீபத்தில் நீக்கி விட்டேன். அவர் நேரடியாக எனக்கு மிரட்டல் விடுத்தார். பேரவையை அழிக்காமல் ஓயமாட்டேன் எனறும் கூறி வருகிறார். இந்த தாக்குதல் சம்பவத்தில் அவரும் பின்னணியில் இருப்பார் என கருதுகிறேன். அவர் டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெ. தீபா கூறிஉள்ளார்.