தமிழக செய்திகள்

கடலூர் முதுநகரில் பாழடைந்த பங்களாவில் இருந்து வீடுகளின் மீது விழுந்த கற்கள்

கடலூர் முதுநகரில் பாழடைந்த பங்களாவில் இருந்து வீடுகளின் மீது கற்கள் விழுகின்றன. மேலும் மஞ்சள், குங்குமம் தடவி பொதுமக்கள் வீசிய கற்களும் திரும்பி வந்து விழுந்ததால் பீதி அடைந்துள்ளனர்.

கடலூர் முதுநகர் பென்சனர் லைன் தெருவில் பாழடைந்த பங்களா உள்ளது. இந்த பங்களாவை சுற்றிலும் தென்னை மரங்கள் உள்ளன. ஆள் நடமாட்டம் இன்றி காணப்படும் இந்த பங்களா, பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பங்களாவில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் கற்கள் வந்து விழுந்தன. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், பங்களா அருகில் செல்லவே அச்சமடைந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து வீடுகளுக்குள் அடுத்தடுத்து கற்கள் வந்து விழுந்ததால், அச்சமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது பங்களாவுக்குள் இருந்து மர்மநபர்கள் யாரேனும் கற்களை வீசுகிறார்களா? என சோதனை செய்வதற்காக அந்த பங்களாவுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அந்த பங்களாவுக்குள் யாரும் இல்லை. மேலும் மர்மநபர்கள் வந்து சென்றதற்கான எந்தவொரு அடையாளமும் அங்கு காணப்படவில்லை.

மஞ்சள், குங்குமம் தடவிய கல்

இதையடுத்து அப்பகுதி மக்கள் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய கல்லை, அந்த பங்களாவுக்குள் வீசினர். இந்நிலையில் அந்த கல்லும், பங்களாவுக்குள் இருந்து மீண்டும் வீசிய இடத்துக்கே வந்து விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், பங்களா முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் போலீசார் வந்ததும், அந்த பாழடைந்த பங்களாவுக்குள் சென்று பார்த்தனர். பங்களா முழுவதும் தேடி பார்த்தும், அங்கு யாரும் இல்லை. மேலும் டிரோன் மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டதில், ஒருவர் கூட சிக்கவில்லை.

தொடர்ந்து போலீசார், சென்னையில் வசிக்கும் அந்த பங்களாவின் உரிமையாளரை தொடர்பு கொண்டு, பாழடைந்து கிடக்கும் பங்களாவை சுத்தம் செய்யும்படி அறிவுறுத்தினர். மேலும் பொதுமக்கள் தாங்கள் வீசிய கற்கள் திரும்பி வந்து விழுந்ததால், அந்த பங்களா குறித்து பீதியடைந்துள்ளனர்.