தமிழக செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டால் அரசு எந்திரம் வேகமாக செயல்படும் கமல்ஹாசன் பேட்டி

மனிதாபிமானம் கருதி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் வந்து பார்வையிட்டால் அரசு எந்திரங்கள் இன்னும் வேகமாக செயல் படும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான நடிகர் கமல் ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத் தில் நிருபர்களிடம் கூறிய தாவது:-

டெல்டா மாவட்டங்களில் சூறாவளி பயணமாக சென்று வந்து உள்ளேன். 30 சதவீத பாதிப்பு பகுதிகளைத்தான் பார்க்க முடிந்தது. இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளது. மக்கள்படும் அல்லல்களை பார்க்கும்போது அவமானமாக இருக்கிறது. எப்படி இதை கவனிக்காமல் விடுகிறார்கள்.

இதை பார்க்கும்போது தமிழனாக, மக்களுக்கு ஏற் படும் கோபத்தை விட அதிகமாக வருகிறது. டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை அடியோடு வேருடன் பிடிங்கி வீசப்பட்டு உள்ளது என்பது சாட்சியாக உள்ளது.

மத்திய-மாநில அரசுகள் மிகவிரைந்து செயல்படவேண்டும். தொடர்ந்து செயல்பட வேண்டும். தீயை அணைக்கும் காரியம் போல் அல்ல. ஆபத்து காலத்தில் உதவும் விசயம் அல்ல. தொடர்ந்து நடக்க வேண்டிய உதவி. தமிழகமே தாங்கி பிடிக்க வேண்டும்.

சாப்பாட்டுக்கு தட்டை தாங்கி பிடிப்பதுபோல் இருக்க வேண்டும். தட்டை தட்டிவிட்டால் நாம் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இது சுய நலமான சிந்தனை. மனிதாபிமானத்துடன் யோசித்து பார்த்தோம் என்றால் நம்மில் ஒரு பெரும் பகுதி அல்லல்படுகிறது. அவர்கள் ஏழைகள் என்றாலும் கவுரவமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள்.

ஏழை, பணக்காரன், ஒரளவு நடுத்தரமாக இருந்தவர்கள் என்று பார்க்காமல் இயற்கை தரைமட்டமாக்கிவிட்டது. மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்த கஷ்டத்திலும் சிறிய இடங்களில் 150 பேர் தங்கி உள்ளனர். முகாம் என்று சொல்ல முடியாத வகையில் ஒழுகும் கூரைகளாக உள்ளன. கஷ்டத்திலும் நீங்கள் நல்லா இருக்கிறீர்களா?, போய் வாருங்கள் என்று சொல்கின்ற பெருந்தன்மை அவர்களிடம் உள்ளது.

அரசின் நிவாரண பணிகள் பத்தாது. அரசு எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கை வேண்டுமானால் சரியாக இருந்து இருக்கலாம். என் வாழ்நாளில் தென்னை மரங்கள் ஒடிந்ததை பார்த்தது இல்லை. பனை மரம் அழுத்தமானது என்ற பெயர் கொண்டது. ஆனால் பல இடங்களில் வரிசையாக சாய்ந்து படுத்திருக்கிறது.

குடியிருக்கும் பகுதிகள் குறுகியதாக இருப்பதால் வியாதிகள் பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் என நிறைய பேர் உள்ளனர். தொற்று நோய் ஏற்பட்டால் புயலுக்கு நிகரான விளைவுகள் ஏற்படும்.

மனிதாபிமானம் கருதி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் வந்து பார்வையிட்டால் அரசு எந்திரங்கள் இன்னும் வேகமாக செயல் படும் என்பது எங்களின் கருத்து. நாட்டில் தமிழகம் புறம்தள்ளப்பட்ட பகுதியாக இருக்கக்கூடாது என்பது கோபமாகவும், ஆதங்கமாகவும் உள்ளது.

மத்திய அரசிடம் இருந்து நிதி முழுமையாக கிடைக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும். புலிகள், மயில்களை காப்பாற்ற வேண்டும் என்று யோசிக்கும் நாம், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று யோசிக்க வேண்டிய தருணம் இது. இதற்கு தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது தூரத்து பார்வை. புயலால் என்ன சேதம் என்று கணக்கெடுத்து அந்த பணத்தைதான் மத்திய அரசிடம் கேட்க வேண்டும். சேதத்தை வந்து சரியாக பார்க்கவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.

சபரிமலை விவகாரத்தில் பாரதீய ஜனதா போராட்டத்தில் ஈடுபட்டு வாகனங்களின் கண்ணாடிகளை உடைப்பது சமூக விரோதம். அது இல்லாமல் அழுத்தமான போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்றால் டெல்டா மாவட்டத்துக்கு வாருங்கள். மக்களின் நேர்மை, கோபம் பார்க்க ஆதங்கமாகவும், அழகாகவும் இருக்கிறது.

நான் சென்றபோது பெரும் கோபத்தில் கூச்சலிட்டு கொண்டு இருந்தார்கள். நான் இறங்கி சென்றபோது வேண்டாம் என்று சிலர் யோசனை சொன்னார்கள். என்னை இன்முகம் காட்டி வரவேற்கவில்லை. குறைகளை சுட்டிக் காட்டிவிட்டு நீங்க எதற்காக வந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டனர்.

எங்களுக்கு சாப்பாடு இருக்கிறது. மின்சாரமும், தண்ணீரும் இல்லை. வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லுங்கள் என்று பெருந்தன்மையாக வழிவிட்டனர். போராட்டம் என்று பார்க்க வேண்டும் என்றால் அதுதான். போராட்டங்களிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது.

விவசாயிகள் கண்ணாடிகளை உடைக்கின்ற, சேதம் விளைவிக்கின்ற நிலைமை மாறுவதற்கு முன் அரசு எந்திரத்தை முடுக்கிவிட வேண்டும். பக்கத்து மாநிலத்தில் சாமிக்காக நடக்கும் போராட்டம் வேறு. இங்கு மக்களுக்காக நடக்கும் போராட்டம். இந்த போராட்டத்தைதான் ஊடகங்களும் முன் நிறுத்த வேண்டும். மனிதனை மனிதன் காப்பாற்ற வேண்டும். கடவுளை கடவுள்கள் காப்பாற்றி கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்