புதுக்கோட்டை,
தமிழகத்தை கடந்த வாரம் தாக்கிய கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் பார்வையிட்டார். அதன்படி களமாவூர், கீரனூர், குளத்தூர், அடப்பன்காரச்சத்திரம், திருவப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் மாலையில் புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.
இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இதில் முதலாவதாக கந்தர்வகோட்டை பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்வதற்காக, அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட்டு காரின் அருகே வந்தார்.
அப்போது புதுக்கோட்டை காமராஜபுரம், காந்திநகர், போஸ்நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரியும், தங்கள் பகுதிகளை வந்து பார்வையிடவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
தங்கள் பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் மின்வினியோகம் இதுவரை வழங்கப்படவில்லை எனக்கூறிய அவர்கள், இதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டு ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், உடனடியாக உங்கள் பகுதிக்கு அதிகாரிகள் வந்து, ஆய்வு செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து காரில் ஏறி கந்தர்வகோட்டை பகுதிக்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டார்.
இதற்கிடையே கந்தர்வகோட்டை பகுதிக்கு உட்பட்ட முல்லைநகர், முஸ்லிம் தெரு, பெரிய அரிசிக்கார தெரு, சின்ன அரிசிக்கார தெரு, பெரியகடை வீதி பகுதி, யாதவர் தெரு மற்றும் அக்கச்சிப்பட்டி கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர், மின்சார வசதிகள் கேட்டு, கந்தர்வகோட்டை பஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அங்கு கார்களில் வந்தனர். பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளதை பார்த்த ஓ.பன்னீர்செல்வம் காரில் இருந்து இறங்கி, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், நிவாரண பொருட்களும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து புறப்பட்டு கறம்பக்குடி பகுதிக்கு சென்றார். அவருடன் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.