தமிழக செய்திகள்

தங்கத்தில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: பி.ஐ.எஸ். எச்சரிக்கை

சப்ளையர்களிடமிருந்து வாங்கும் தங்கத்தின் தரத்தை ஒவ்வொரு நகை வியாபாரியும் முறையாக உறுதிசெய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தங்கத்தில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரீனியம் கலப்படமா..?

தங்கத்தில் கலப்படம் செய்யப்படுவதாக, குறிப்பாக சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரீனியம் என்ற வேதிப்பொருளை கலப்பதாக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தீவிரமாக தகவல் பரவி வருகிறது.

இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரம் இவ்வாறு தங்கத்தில் கலப்படம் செய்ய முடியாது என நிபுணர்கள் கூறியிருந்தனர்.

எனினும் தங்கத்தில் எத்தகைய கலப்படமும் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிர கண்காணிப்பு

இது தொடர்பாக அகில இந்திய ரத்தினம், நகை உள்நாட்டு கவுன்சில் தலைவர் ராஜேஷ் ரோக்தே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தங்கத்தில் கலப்படம் செய்யப்படுவதாக வெளியான தகவல் இந்தியத் தர நிர்ணய ஆணையத்தின் (பி.ஐ.எஸ்.) கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தங்கத்தில் கலப்படம் செய்வதற்கான இத்தகைய பொருட்களை தயாரிப்பவர்கள், வினியோகிப்பவர்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் எங்களுக்கு உறுதியளித்துள்ளது.

தங்கத்துடன் கலப்பதற்கான இத்தகைய பொடி அல்லது பொருள் ஏதேனும் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹால்மார்க்கிங் மையங்கள்

ரீனியத்தை தங்கத்துடன் கலக்கும்போது, தங்கத்தின் தூய்மை அதற்கு விகிதாசாரமாக அதிகரிக்காமல் அதன் எடை மட்டும் அதிகரிக்கக்கூடும் என்ற முறைசாரா தகவல்களை சில தரப்புகளிலிருந்து பெற்று வருகிறோம். இருப்பினும், நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இது தொடர்பான முறையான புகார் எங்களுக்கு வரவில்லை.

இந்தியத் தர நிர்ணய ஆணையம் இந்த விவகாரத்தை மிகத்தீவிரமாக எடுத்துக்கொண்டு, மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதை ஒட்டுமொத்த துறைக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். இத்தகைய தனிமங்களை கண்டறிவதற்கு தேவையான பொருத்தமான சோதனை எந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஏற்கனவே எங்கள் ஹால்மார்க்கிங் மையங்களில் உள்ளன.

ஜி.எஸ்.டி. இன்வாய்ஸ் இல்லாமல்

எனவே வாடிக்கையாளர்கள் நற்பெயர் கொண்ட, தரமான உள்ளூர் நகைக்கடைகளில் தங்கத்தை வாங்க வேண்டும். முறையான ஜி.எஸ்.டி. செலுத்தப்பட்ட ரசீதை வலியுறுத்தி பெறவேண்டும். முறையான பில் அல்லது ஜி.எஸ்.டி. இன்வாய்ஸ் இல்லாமல் நகை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

இதைப்போல மொத்த விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் அல்லது பிற சப்ளையர்களிடமிருந்து வாங்கும் தங்கத்தின் தரத்தை ஒவ்வொரு நகை வியாபாரியும் முறையாக உறுதிசெய்யவேண்டும்.

ஹால்மார்க்கிங் மையம் வழங்கும் சான்றிதழை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கவேண்டாம். தேவைப்படும் இடங்களில் உங்கள் சொந்தக்கடைகள் மற்றும் அலுவலகங்களில் கூடுதல் பரிசோதனைகளை செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு நகைகளை விற்பனை செய்வதற்கு முன்பு, 'பி.ஐ.எஸ். கேர்' செயலி மூலம் ஹால்மார்க்கிங் விவரங்களை சரி பார்க்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT