சென்னை,
கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா தரிசனத்துக்கு பணம் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், இதுபோன்ற புகார்கள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் ரமேஷ் பேசியதாவது:-
ஆட்சி அமைந்து தற்போது 3 மாதங்களே நிறைவடைந்துள்ளன. கோவில் நிர்வாகங்கள் மற்றும் பக்தர்களின் நலன் சார்ந்த அனைத்து மாற்றங்களையும் ஒரே நாளில் கொண்டுவந்துவிட முடியாது. ஒவ்வொரு நடவடிக்கையையும் முறையாக ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை படிப்படியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கோவில்களுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான சூழலை உருவாக்குவது அவசியம். அதேநேரத்தில், கோயில் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கோவில்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது, தரிசன வரிசைகளை ஒழுங்குபடுத்துவது, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஊழியர்களுடன் ஒத்துழைத்து, அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
கட்டணமில்லா தரிசனத்துக்கு பணம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிப்பது அவசியமாகும். பக்தர்கள் இதுபோன்ற புகார்களை எதிர்கொண்டால், சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம்.
கோவில்களில் பக்தர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, தரிசன நடைமுறைகளைச் சீரமைப்பதுடன், முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.