மதுரை,
திருநெல்வேலி மாவட்டம், விஜய நாராயணபுரத்தில் மாலை நேர கபடி போட்டி நடத்த அனுமதி கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த தாசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சதி குமார சுகுமார குருப் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கபடி போட்டி நடத்த கடும் கட்டுபாடுகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
தீர்ப்பு விவரம்:-
கபடிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள் அல்லது அரசியல் தலைவர்களின் படங்கள், சாதி ரீதியான அடையாளங்களோ இருக்கக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சாதிக் கட்சிகளின் புகைப்படங்களோ, பிளக்ஸ் பேனர்களோ, இருக்க கூடாது.
அரசியல் மற்றும் சாதியை ரீதியான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது. கபடி விளையாட்டு நடைபெறும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு இருக்க வேண்டும். அனைத்து முதலுதவிக்கான சிகிச்சைகள் உபகரணங்களும் இருக்க வேண்டும். விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதைப் பொருட்களோ, மதுவோ உட்கொண்டிருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகள் அடிப்படையில் கபடி போட்டிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிபந்தனைகளை மீறும் வகை போட்டி நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுத்து போட்டியை நிறுத்தலாம் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.