சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“அண்மைக் காலத்தில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மோடி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கம் மீது அப்பட்டமான தாக்குதலை நடத்தி வருகிறது. தொழிலாளர்கள் 100 ஆண்டு காலமாக போராடிப் பெற்ற உரிமைகளை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக 4 தொகுப்புச் சட்டங்களாக திருத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்கள் கொதித்தெழுந்து போராடி வருகின்றனர்.
இந்திய நாட்டின் வளங்களை சூறையாடி கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் நரேந்திர மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலன்களை பாதுகாக்கவும் 12-ந்தேதியன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக்கிடும் வகையில் அனைத்து ஜனநாயக இயக்கங்களும், தமிழக உழைப்பாளி மக்களும், வணிகப் பெருமக்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.