சென்னை,
ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், கடந்த 3 நாட்களாக முழு அளவிலான பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து வந்தனர். வேலைநிறுத்தம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று அவசர அவசரமாக போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமிகாந்தன் முன்னிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் மற்றும் 9 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தேர்தலை முன்னிட்டு கைவிடப்படாது என்றும், தொடர்ந்து நடத்தப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதேபோன்று, போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட இடைக்கால நிவாரணத்தொகையான மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதை கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. மேலும், போராட்டம் நடத்தப்பட்ட 3 நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றுக்கொண்டன.
இந்த நிலையில் வேலைநிறுத்த போராட்டம், நேற்று வாபஸ் பெறப்பட்ட நிலையில் இன்று பணியாளர்கள் வழக்கம்போல தங்களின் பணிக்கு திரும்பினார்கள். இதனால் தமிழகம் முழுவதும் இன்று வழக்கம் போல் 100 சதவீத பேருந்துகள் இயங்கத்தொடங்கியது.
அந்தவகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை முழுவதும் 480 முதல் 490 பேருந்துகள் வரை இயக்கப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், 427 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தற்பொழுது 100 சதவீத பேருந்துகள் இயங்கதொடங்கியதால், பொதுமக்கள் சிரமமின்றி பயணித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.