தூத்துக்குடி,
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக் காலை கடந்த 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இந்த ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பாஸ்பாரிக் அமிலம், கந்தக அமிலம் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இந்த ஆலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மேலும் விரிவாக்கம் செய்வதை கைவிட்டு, நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்துக்கு மடத்தூர் உள்ளிட்ட 18 கிராம மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது. இதனால் கடந்த 1 மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100-வது நாளாக நீடித்தது.
நூறாவது நாளையொட்டி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இன்று (புதன்கிழமை) காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவாக தூத்துக்குடியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை.
முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வந்த கிராம மக்கள் மடத்தூரிலும், தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் திரேஸ்புரம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் அருகேயும் நேற்று காலை 9 மணி அளவில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது. ஆலயம் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
ஆனால், ஆங்காங்கே போலீசார் அவர்களை வழிமறித்தனர். இருந்தபோதும், போலீசார் வைத்து இருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர். தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே அவர்கள் வந்தபோது, அந்த பகுதியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் தலைமையில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி, 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருப்பதால் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.