சென்னை,
தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.43 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களது சம்பளம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதியுடன் முடிந்தது.
இதையடுத்து அரசுக்கும், போக்குரத்துக் கழகங்களில் உள்ள 46 தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது. மொத்தம் 21 தடவை இதுவரை பேச்சு நடந்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் எந்த முடிவுக்கும் வராமல் தோல்வியில் முடிந்தது.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சம்பள உயர்வு 2.57 மடங்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
அரசு தரப்பில் மூன்று விதமான சம்பள உயர்வு தருவதாக தெரிவிக்கப்பட்டது. பணியில் சேர்ந்து ஆறு வருடங்களுக்கு குறைவான ஊழியர்களுக்கு 2.44 மடங்கும், 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருப்பவர்களுக்கு 2.41 மடங்கும், 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுக்குள் பணியில் சேர்ந்தவர்களுக்கு மூன்று மடங்கு சம்பள உயர்வும் தர அரசு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கேட்பது போன்று 2.57 மடங்கு சம்பள உயர்வு வழங்கினால், டிரைவர்கள், கண்டக்டர்களின் குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.19 ஆயிரத்து 500 ஆக இருக்கும். அரசு தெரிவித்துள்ள 2.44 மடங்கு சம்பள உயர்வு வழங் கினால் டிரைவர்கள், கண்டக்டர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.17,500 ஆக இருக்கும்.
மாத சம்பளத்தில் ரூ.2 ஆயிரம் உயர்வு வித்தியாசம் வந்ததால் அரசின் முடிவை ஏற்க தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. உள்பட 13 தொழிற்சங்கங்கள் மறுத்தன. ஆனால் அரசின் முடிவை 30 தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன.
பஸ்கள் ஓடவில்லை என்றாலும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் தங்களது சம்பள உயர்வு கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். ஆனால் அதை ஏற்க அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதையடுத்து பஸ்ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
சென்னையில் இன்று நண்பகலில் நடைபெற்ற போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், போராட்டத்தைத் தொடர்வது என்று 14 தொழிற்சங்கங்கள் இணைந்து முடிவு எடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு வருந்துகிறோம். இந்த இன்னல்களுக்கு அரசின் அநீதியான செயல்பாடுகளே காரணம்.
தாற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்குவது அபாயகரமானது. இதுபோன்ற அபாயகரமான வேலையில் இறங்குவது அரசுக்கு அழகல்ல. பல இடங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சில இடங்களில் காலியான பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் இயக்கப்படுவதாகக் கணக்குக் காட்டவே அரசு இதனைச் செய்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவையும் அரசு செயல்படுத்தவில்லை.
பிற துறையினருக்கு நிகராக ஊதியம் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதுவரை போக்குவரத்து ஊழியர்களின் பணப்பலன்கள் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு நிலுவைத் தொகை உள்ளது. ஆனால், ஆண்டுக்கு ரூ.1000 கோடி தருகிறோம் என அமைச்சர் சொல்கிறார். இதனை ஏற்றால் நாங்கள் 7ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது வரும்.
எங்கள் ஊதியத்தை 2.5 ஆல் பெருக்கி வழங்குமாறு நாங்கள் கோருகிறோம். ஆனால், அரசோ, 2.4 ஆல் பெருக்கிக் கொடுக்கிறோம் என்கிறது. ஏற்கனவே பிற துறையினரை விட எங்களுக்கு ஊதியம் குறைவுதான். மற்றவர்களுக்கு இணையாக ஊதியம் தாருங்கள் என்றுதான் கோருகிறோம் என்றார்.
தொழிற்சங்க நிர்வாகிகளுடன் உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, பொங்கல் பண்டிகைக்குள் சுமூகத் தீர்வு காண வேண்டும். தற்போது எங்களுடன் 17 தொழிற்சங்கங்கள் உள்ளன என்றும், அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி தொழிலாளர்களை மிரட்டக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஒப்பந்தம் போடுவதாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது. ஏன் என்றால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஒப்பந்தம் போடுபவர்களை விட, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் போடும் எங்கள் ஊதியம் ஏன் குறைவாக உள்ளது. அவர்களை விட அதிகமாக அல்லவா இருக்க வேண்டும். இதில் இருந்தே அரசு கூறுவதில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது என்றார். வேலை நிறுத்தம் குறித்து இன்று மாலை சிந்தாதிரிப்பேட்டையில் மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
#CITU | #Soundararajan | #BusStrike | #Transport