திருச்சி,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழந்ததாகப் புகார் - முறையான விசாரணை நடைபெறுவதை மருத்துவத்துறை உறுதி செய்ய வேண்டும்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியர் படிப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், சக மாணவர்களும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படித்து வந்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட மூக்கு அறுவை சிகிச்சையின் போது அதிகளவிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என்று சக மாணவிகளே குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுமக்களால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் மருத்துவர்களில் ஒரு சிலரின் அலட்சியமும், பொறுப்பின்மையும் ஒட்டுமொத்த மருத்துவத்துறை மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, மாணவி உயிரிழப்பு தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.