சென்னை,
சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர் உள்பட 3 பேரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.