திருவண்ணாமலை அருகே உள்ள தொடக்க பள்ளிகளில் மழை நேரங்களில் மாணவர்கள் சிரமங்களுக்கு உள்ளாவதால் புதுகட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடக்க பள்ளிகள்
திருவண்ணாமலை அருகில் உள்ள பூதமங்கலம் ஊராட்சி பகுதியில் துர்க்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், கொரக்கதாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
துர்க்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 25 மாணவர்களும், கொரக்கதாங்கல் பகுதியில் உள்ள பள்ளியில் 20 மாணவர்கள் மட்டுமே பயின்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த பள்ளிகளின் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பள்ளிகளின் மேல் உள்ள சிமெண்டு பூச்சுகள் உடைந்து காணப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மிதமான மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது.
மழை நேரங்களில் துர்க்கம் பகுதிகளில் உள்ள பள்ளியில் மேல் பகுதியில் உள்ள உடைந்த சிமெண்டு பூச்சு பகுதிகளில் இருந்து தண்ணீர் உள்ளே வருவதால் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
அதேபோல் கொரக்கதாங்கல் பகுதியில் உள்ள பள்ளியிலும் மழை வரும் சமயங்களில் உள்ளே தண்ணீர் விழுவதால் பள்ளியின் அருகில் உள்ள வீட்டின் வராண்டாவில் வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாக கூறப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வந்துள்ளனர். பள்ளியின் கட்டிடம் மோசமான நிலையில் உள்ளதால் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பாமல் வேறு பள்ளியில் சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதமும் குறைந்து காணப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு இந்த பள்ளிகளை புதுப்பிக்க வேண்டும் அல்லது புது கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.