சேலம்,
சேலம் கொண்டலாம்பட்டி மற்றும் வீரபாண்டி பகுதிகளில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். செய்முறை தேர்வுகள் தொடங்க இருப்பதால் புதிதாக நடத்தப்படும் பாடங்களை படிக்க நேரம் இருக்காது என்று அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே இருக்கும் பாடங்களை படிப்பதற்கான கால அவகாசமும் குறைவாக இருப்பதால் தங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும், எனவே பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, மாணவர்கள் அனைவரும் தனித்தனி மனுக்களை வழங்குமாறு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் தனித்தனியாக தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கினர். இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.