தமிழக செய்திகள்

வயலில் வேன் கவிழ்ந்தது; 7 மாணவர்கள் படுகாயம்

திருவோணம் அருகே வயலில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

திருவோணம் அருகே வயலில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

பள்ளி மாணவர்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள குறிச்சி கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படும் வேன் மூலம் பள்ளிக்கு அழைத்துச்சென்று மாலையில் குழந்தைகளை வீட்டுக்கு கொண்டு வந்து விடுவது வழக்கம்.

இவ்வாறு பள்ளியின் சார்பில் இயக்கப்பட்ட வாகனம் பழுது அடைந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வாடகை வேன் மூலம் பள்ளிக்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அந்த வேன் நேற்று காலை திருவோணம் அருகே உள்ள பாதிரங்கோட்டை, சீதாம்பாள்புரம் ஆகிய ஊர்களை சேர்ந்த மாணவர்களை வேனில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது.

வேன் கவிழ்ந்தது

திருவோணம் அருகே அதம்பை தெற்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள வயலுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்று விபத்தில் சிக்கிய வேனில் இருந்த மாணவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் பாதிரங்கோட்டையை சேர்ந்த தமிழ்பிரியா(வயது 7), ராஜபவின்(5), தீர்த்திகா(5), தேசிகா(4), ரேணுகா(3), கோபிகா(4), ரோகித்(7) ஆகிய 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தஞ்சை அரசு ராஜாமிராசுதாரர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து