கடலூர்,
கடலூர் மாவட்டம் அங்குசெட்டிப்பாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது38). இவருடைய மனைவி சுமதி (32). இந்த தம்பதிக்கு லதா (11), நந்தினி (7) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அர்ஜூனன் (14) என்ற மகனும் இருந்தான். அர்ஜூனன் 9-ம் வகுப்பு படித்து வந்தான். முருகன் சிறுவத்தூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் குடும்பத்தினருடன் தங்கி இருந்து அங்கு வேலை பார்த்து வருகிறார். முருகன் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
படுகொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மீண்டும் முருகன் மதுகுடித்துவிட்டு வந்து சுமதியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதைபார்த்து கோபமடைந்த அர்ஜூனன், தனது தந்தையிடம், 'ஏன் இப்படி மதுகுடித்துவிட்டு வந்து அம்மாவிடம் தகராறு செய்து வருகிறீர்கள்' என கூறி தட்டிக்கேட்டுள்ளான். இதையடுத்து முருகன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அர்ஜூனன் வீட்டில் படுத்து தூங்கினான்.
நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் மதுகுடித்துவிட்டு முருகன் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து, அவரை தாக்க முயன்றுள்ளார். அவரிடம் இருந்து சுமதி தப்பி ஓடிவிட்டார். அப்போது, மதுபோதையில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த முருகன் தனது மகன் என்றும் பாராமல் அங்கு தூங்கிக்கொண்டிருந்த அர்ஜூனனின் தலையில் குழவி கல்லை தூக்கிக்போட்டார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அர்ஜூனன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.