தமிழக செய்திகள்

கஜா புயல் ஆய்வு; மத்திய குழு 2 நாட்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பினை ஆய்வு செய்த மத்திய குழு 2 நாட்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை,

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.

கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதை தொடர்ந்து மத்திய குழு சேதப்பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி, மத்திய உள்துறை இணை செயலாளர்(நீதித்துறை) டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் கடந்த 24-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வை தொடங்கினர். 2-வது நாளாக நேற்று முன்தினம் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும், 3-வது நாளாக நேற்று நாகை மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் 3 நாட்களாக மேற்கொண்ட ஆய்வை அடுத்து இதுபற்றிய ஆய்வு அறிக்கையுடன் முதல் அமைச்சர் பழனிசாமியை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிச்சர்டு, தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. புயல் பாதித்த பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் அளிப்போம் என கூறினார்.

இந்த நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு முடித்து 2 நாட்களுக்குள் இடைக்கால அறிக்கையை மத்திய குழு தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசை பாராட்டிய நீதிபதிகள் நிவாரண பணி முழுமையடைய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர்.

தேவையான அளவு நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் குடிநீர் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பால், ரொட்டி ஆகியவை வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

தொடர்ந்து நீதிபதிகள், மத்திய குழு அறிக்கையை அளித்த ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை