வால்பாறை
தமிழக அரசு சார்பில் இளைஞர், இளம்பெண்கள் சுயதொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரியங்கா தகவல் தெரிவித்தார்.
சமுதாய உரிமைகள் கூட்டம்
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக வனப் பகுதியில் உள்ள கவர்க்கல் மற்றும் சிங்கோனா மலைவாழ் கிராமத்தில் சமுதாய உரிமைகள் குறித்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மலைவாழ் மக்களுக்கு சமுதாய உரிமைகள் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வனப்பகுதிக்குள் வன உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்த விவசாய பூமிகள் வழங்குவது, உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான வீடு, குடிதண்ணீர், மருத்துவ வசதி, பிழைப்புக்கான ஆதாரம், சுய தொழில் தொடங்குவது, குறிப்பாக உங்கள் பிள்ளைகளை கட்டாயம் பள்ளி கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுயதொழில்
பள்ளியில் சேர்ந்து படிக்க விருப்பமுள்ளவர்களை அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இளைஞர், இளம் பெண்கள் சுயதொழில் செய்ய அரசின் மூலமாகவும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நலத்திட்ட உதவிகளான முதியோர் உதவித்தொகை, நலவாரிய உதவிகள், உழவர் பாதுகாப்பு திட்ட உதவிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம், வனத் துறையினரின் சிறப்பு உதவிகள் அனைத்தும் உங்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
விளைபொருட்கள் சேகரிப்பு
வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வனப் பகுதிக்குள் நீங்கள் சென்று வன விளை பொருட்களை சேகரித்து கொள்வதற்கும் விவசாய நிலங்களை அமைத்துக் கொள்ளவும் உங்களுக்கான சமுதாய உரிமை அடிப்படையில் விரைவில் இடங்கள் எல்லைகள் வரையறுத்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கிராம சபை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனித் தாசில்தார் தணிகைவேல், வால்பாறை சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தார் ஜெகதீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், வட்ட வழங்கல் அலுவலர் சுந்தர்ராஜன், குடிமைப் பொருள் வருவாய் ஆய்வாளர்கள் ஈஸ்வரன், பன்னீர்செல்வம், மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரக வனத்துறையினர் மற்றும் உலகளாவிய நிதிய அமைப்பினர் செய்திருந்தனர். கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பயிற்சி கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.