சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளார். அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டை தெரிவித்து வருகின்றனர், விமர்சனங்களும் எழுந்து வருகிறது. தமிழக பா.ஜனதா அவருடைய அரசியல் அறிவிப்பை வரவேற்று உள்ளது.
இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி, நடிகர் ரஜினிகாந்தை ஒரு படிப்பறிவில்லாதவர், ஊழல்வாதி என விமர்சனம் செய்து உள்ளார்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை மீடியாக்களே மிகவும் பெரிது படுத்துகிறது என கூறிஉள்ளார் சுப்பிரமணிய சாமி.
ரஜினிகாந்த் படிக்காதவர். அவரிடம் நம்மிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இதுவும் தமிழ் நடிகர் அரசியலில் இணைந்தார் என கூறும் ஒரு பழைய கதை மட்டும்தான். நான் எப்போதும் ரஜினிக்கு எதிர்ப்புதான் தெரிவிக்கிறேன். சினிமா நட்சத்திரங்களை என்று மக்கள் விடுவிக்கிறார்களோ அப்போதுதான் தமிழகத்தின் நிலையானது முன்னேறும். அவர் இன்னும் அவருடைய கட்சியை அறிவிக்கவில்லை. பாரதீய ஜனதாவுடன் எல்லாம் அவரை கூட்டணி அமைக்கவிட மாட்டேன். தவறான நேரம் மற்றும் இடத்தில் இருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். அவருடைய கருப்பு பண விஷயம் விசாரணைக்கு வந்ததும் அவர் கவலையடைவார்.
தமிழக மக்கள் ரஜினி ரசிகர்களின் பாடல்கள் மற்றும் நடனங்களில் விழுந்துவிடக்கூடாது, ஒரு நடிகர் சங்கம் அரசியல் கட்சியாக முடியாது,என கூறிஉள்ளார்.
செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசிய சுப்பிரமணிய சாமி, என்னுடைய எதிர்ப்பையும் மீறி பாரதிய ஜனதா ரஜினிகாந்தோடு கூட்டணி வைத்தால் கட்சியில் இருந்து விலகி வேறு மாநிலம் சென்று அரசியல் செய்வேன் எனவும் குறிப்பிட்டு உள்ளார். ரஜினிகாந்த் அரசியல் பயணத்தை மாநில பா.ஜனதா வரவேற்று உள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார் சுப்பிரமணிய சாமி.