கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 3 படகுகளும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வழக்கம்போல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தன. வாரத்தின் கடைசி நாட்கள் என்பதால் இன்றுஅதிகாலையில் இருந்தே கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதனால் படகு மூலம் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதற்கிடையில் இன்று காலை 9 மணி அளவில் கடல் நீர்மட்டம் "திடீர்"என்று தாழ்வானது. இதை தொடர்ந்து இன்று காலை9 மணி முதல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்தில் இருந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளும் படகு மூலம் அவசரஅவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் இன்று காலையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு விட்டு சென்றனர்.