தமிழக செய்திகள்

மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் அடையாறு பாலம் அருகில் சாலையில் திடீர் பள்ளம்;போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் பகுதியில் அடையாறில் திடீரென்று சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் போக்குவரத்து தடைப்பட்டு, அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தினத்தந்தி

சாலையில் திடீர் பள்ளம்

சென்னை மாநகரில் 2-ம் கட்டமாக 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு பணிமனை நோக்கி மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூங்காவில் இருந்து 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் எந்திரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த பணி நடைபெறும் அடையாறு, துர்காபாய் தேஷ்முக் சாலையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் நேற்று காலை 9 மணி அளவில் சாலையில் திடீரென்று ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலீசார், மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அவர்கள் வந்து குழியை முதலில் ராட்சத தார்பாய் போட்டு மூடியதுடன், பள்ளத்தை சுற்றிலும் இரும்பு வேலி அமைத்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் அடையாறில் இருந்து கிரீன்வேஸ் சாலை நோக்கி வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் திரு.வி.க.பாலத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நகர முடியாமல் அணிவகுத்து நின்றன.இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். கல்லூரிக்கு வந்த மாணவிகளுக்கு மதியம் வீடுகளுக்கு திரும்பி செல்ல அப்பகுதியில் முறையாக பஸ் வசதி இல்லாததால் அவதிப்பட்டனர்.

4 மணி நேரம்

சம்பவ இடத்தை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் பார்வையிட்டனர். உடனடியாக ஒப்பந்ததாரர்கள் பெரிய லாரிகளில் ரெடிமேட் காங்கிரீட் கொண்டு வந்து அந்த குழியில் கொட்டினர். அதற்கு மேல் பொக்லைன் எந்திரம் மூலம் 2 ராட்சத இரும்பு பிளேட்டுகள் போட்டு பள்ளத்தை பாதுகாப்பான முறையில் மூடினர். அதிர்ஷ்டவசமாக திடீர் பள்ளத்தால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.

சுரங்கம் தோண்டும் எந்திரம் பணி செய்து வரும் பகுதியில் உறுதி தன்மை இல்லாத மணல் பகுதி இருந்தால் அப்பகுதியில் இதுபோன்று பள்ளங்கள் ஏற்படுவது வழக்கம். அதன்படி இந்த இடத்தில் சுமார் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதாகவும், உடனடியாக ரெடிமேட் காங்கிரீட் உடன் சென்று பள்ளத்தை அடைத்ததால் சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு மதியம் 1 மணியளவில் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானதாகவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்