சேலம்,
கோடை காலத்தை முன்னிட்டு ஈரோடு மற்றும் போத்தனூரில் இருந்து சேலம் வழியாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வரை சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோடு- சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் ஈரோட்டில் இருந்து (வண்டி எண்-06026) இன்று (வியாழக்கிழமை) காலை 9.20 மணிக்கு புறப்பட்டு சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக மாலை 5 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் சென்னை சென்டிரல்- போத்தனூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06025) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
இதேபோல் போத்தனூர்-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06028) மற்றும் மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரல்-போத்தனூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06027) வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மேற்கண்ட காலஅட்டவணையில் இயங்கும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.