தமிழக செய்திகள்

வள்ளியூரில் அரசு பஸ் நடத்துநர் சந்தேக மரணம்: 5 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் நடத்துநர் ஒருவர், மது போதையில் காயங்களுடன் வீட்டிற்கு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக பஸ் நடத்துநர் சந்தேக மரண வழக்கில் போலீசார் விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக மரண வழக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல் நிலைய சரகத்தில், அரசு போக்குவரத்துக் கழக பஸ் நடத்துநராக வள்ளியூரைச் சேர்ந்த சண்முகம் மகன் சிவசுப்பிரமணியன் (வயது 52) பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5.10.2026 அன்று, மது போதையில் காயங்களுடன் வீட்டிற்கு சென்ற நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வள்ளியூர் காவல் நிலையத்தில் சந்தேக மரண வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

5 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு

முதற்கட்ட விசாரணையில், சிவசுப்பிரமணியன் மது அருந்திக் கொண்டிருந்தபோது அவருக்கும் உடனிருந்த நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அதனைத் தொடர்ந்து 5 பேர் சேர்ந்து அவரை தாக்கியதும் தெரியவந்தது. விசாரணையின் அடிப்படையில் வள்ளியூரைச் சேர்ந்தவர்களான சந்தனசுதன்(29), மணிகண்டன்(எ) கொண்டா(33), முத்துகிருஷ்ணன்(எ) தழும்பு முத்துகிருஷ்ணன்(45), களக்காட்டைச் சேர்ந்த சாமிநாதன்(36), மஞ்சங்குளத்தைச் சேர்ந்த பாண்டி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT