தமிழக செய்திகள்

வருமான வரி அலுவலகத்துக்கு, விவேக்கை அழைத்துச்சென்று நடவடிக்கை

வேலைக்காரர்கள், டிரைவர்கள் பெயரில் வாங்கிக் குவித்த பினாமி சொத்துகள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். விவேக்கை வருமான வரி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

சென்னை,

சசிகலா உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல், திருச்சி, கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் வெளிமாநிலங்களில் சில இடங்களிலும் அவர்கள் சோதனை நடத்தினார்கள். 187 இடங்களில் 1,600-க்கும் அதிகமான அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பல போலி நிறுவனங்களை தொடங்கி அவற்றில் கருப்பு பணத்தை முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.

ஏற்கனவே பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்துவிட்ட நிலையில், சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், அதன் தலைமை செயல் அதிகாரியும், சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு, அலுவலகம், அவரது சகோதரி கிருஷ்ணபிரியாவின் வீடு, சென்னையை அடுத்த படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை ஆகிய இடங்களில் நேற்று 5-வது நாளாக வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

விவேக் வீட்டில் சோதனை நடத்திய போது, விவேக், அவருடைய மனைவி கீர்த்தனா மற்றும் மைத்துனர் பிரபு ஆகியோரை தனித்தனியாக அறையில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் ஒரு பெண் அதிகாரி உள்பட 4 அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மாலை 5.10 மணி வரை விசாரணை மற்றும் சோதனை தொடர்ந்தது. இதையடுத்து மேல் விசாரணை நடத்துவதற்காக விவேக் மற்றும் அவருடைய மைத்துனர் பிரபுவை 5.15 மணி அளவில் மகாலிங்கபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.

ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம் மற்றும் விவேக் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், வருமான வரி அலுவலகத்தில் விவேக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை நேற்று இரவு 10 மணி வரை நீடித்தது. அதன் பிறகு விவேக் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கர்நாடக மாநில அ.தி.மு.க. (அம்மா) அணி செயலாளர் புகழேந்தி, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார் மற்றும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோருக்கு வருமான வரித்துறையினர், சென்னை நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி நேற்று காலை டாக்டர் சிவகுமார், வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம், அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட தஸ்தாவேஜூகள் மற்றும் பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து பகல் 12.30 மணி அளவில், மீண்டும் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, புகழேந்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் மற்றும் பண பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்களை புகழேந்தியிடம் இருந்து வருமான வரித்துறையினர் பெற்றதாக தெரிகிறது. பகல் 2 மணி வரை புகழேந்தியிடம் விசாரணை நடத்திவிட்டு அவரை அனுப்பி வைத்தனர்.

பின்னர் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னுடைய வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையின் தொடர்பாக எனக்கு வருமான வரித்துறையினர் இன்று (நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன்.

நேற்று விசாரணை நடத்தப்பட்ட மூன்று பேரிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் அடங்கிய தகவல்களை அறிக்கையாக வருமான வரித்துறையினர் டெல்லிக்கு அனுப்பி உள்ளனர்.

தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) சசிகலாவின் சகோதரர் திவாகரன் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜர்ஆவார் என்று கூறப்படுகிறது.

வருமான வரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சசிகலா உறவினர்களில் பெரும்பாலானவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு உள்ள சொத்துகளை நேரடியாக தங்கள் பெயரில் வாங்கவில்லை என்பதும், பினாமி பெயரில் சொத்துகளை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.

அவர்கள் அந்த சொத்துகளை தங்கள் வீடுகளில் வேலை பார்க்கும் கார் டிரைவர்கள், வேலைக்காரர்கள், உதவியாளர்கள், நண்பர்கள் மற்றும் தங்களோடு வர்த்தக தொடர்பில் உள்ளவர்கள் பெயரில் வாங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு 215 சொத்துகளை அவர்கள் வாங்கி இருப்பது தெரியவந்தது. அந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அந்த ஆவணங்கள் பற்றிய முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த ஆவணங்களை எல்லாம் ஆராய்ந்த பிறகு, பினாமி சொத்துகள் யார், யார் பெயரில் உள்ளதோ, அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க உள்ளனர். மொத்தம் 355 பேருக்கு சம்மன் அனுப்பப்பட இருப்பதாக தெரிகிறது. அப்போது அவர்களிடம் உங்கள் பெயரில் இவ்வளவு சொத்துகள் எப்படி வாங்கப்பட்டது? இதற்கு வருமான ஆதாரத்தை காட்டுங்கள் என்று அதிகாரிகள் கேள்வி எழுப்புவார்கள்.

பினாமி பரிமாற்ற சட்டத்தின் படி, பினாமி சொத்துகளை பறிமுதல் செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே அனைத்து ஆவணங்களும், சோதனை முடிந்தவுடன் விரிவான ஆய்வு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை