சென்னை ஐகோர்ட்டில், திருப்பூரைச் சேர்ந்த முத்து சுப்பிரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழ் வளர்ச்சித்துறை என்ற பதம் தவறானது. மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், மேம்பாட்டு துறைகள் என்றே அழைக்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித்துறை என்ற பெயரை மேம்பாட்டுத்துறை என மாற்ற, அந்த துறையின் இயக்குனரே, கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஆனால், தமிழ் மேம்பாட்டு துறை என்று பெயர் மாற்றம் செய்தால், தமிழ் மொழியை மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது என குறை நிலையில் உள்ளதாக பொருள் கொள்ளப்படும் என்பதால், துறையின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வளர்ச்சி என்பதற்கும், மேம்பாடு என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. அதனால், துறையின் பெயரை மாற்ற மறுப்பு தெரிவித்த கடிதத்தை ரத்து செய்து, தமிழ் மேம்பாட்டு துறை என பெயர் மாற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், பெயரை மாற்றாததால் மனுதாரருக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.