சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 6-ந்தேதி கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. அதேபோல், இந்த ஆண்டும் பொங்கலுக்கு முன்பாக சட்டசபை கூடும் என்று முதலிலும், பொங்கலுக்கு பிறகு கூடும் என்று இரண்டாவதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், சட்டசபை கூடுவதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத் தொடர் மார்ச் மாதம் 23-ந் தேதியுடன் அவசரமாக முடித்துக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, செப்டம்பர் 14-ந்தேதி கூடிய சட்டசபை கூட்டம், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் 3 நாட்கள் நடந்தது. அத்துடன் கடந்த ஆண்டு சட்டசபை நிகழ்வுகள் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் பிப்ரவரி 2-ந்தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். அவரது உரையில், அரசு திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெறும். மேலும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றிருக்கும்.
இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேறு வருவதால், கவர்னர் உரையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. முதல் நாளில் கவர்னரின் உரை மட்டும் இருக்கும். அதன்பிறகு, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஒரு சில நாட்கள் நடைபெறும். அது எத்தனை நாட்கள் என்பது, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
சட்டசபை கூடுவது தொடர்பாக, எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம், பிப்ரவரி 2-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில், ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், 3-வது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கத்தில் கூட்டப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்று காலை 11 மணிக்கு கவர்னர்உரை நிகழ்த்த உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக சட்டசபை கூடுவதால், இந்தக் கூட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடிய சட்டசபை கூட்டத்தின்போது, எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும், சட்டசபை பணியாளர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, அதாவது இம்மாதம் இறுதியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது.