சென்னை
2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் நான்கு லட்சம் தேர்தல் பணியாளர்களை உள்ளடக்கிய பல்வேறு பங்குதாரர்களுக்கு விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், செலவின கண்காணிப்பு குழுக்கள், வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்கு சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் தேர்தல் நடைமுறையில் முழுமையான பயிற்சி அளிக்கும் வகையில் இந்த பயிற்சி திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி திட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக, முக்கிய பங்குதாரர்களின் திறன், அறிவு மற்றும் தயார்நிலை ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் (IIIDEM) மூலம் மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து, முதற்கட்ட மாநில அளவிலான பயிற்சிகள் பின்வருமாறு நடத்தப்பட்டன: இதன்படி,
1. தேர்தல் நடத்துதல் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு 09.03.2026 மற்றும் 10.03.2026 ஆகிய நாட்களிலும்
2. தேர்தல் நடத்துதல் குறித்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள்/உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு 03.03.2026 மற்றும் 04.03.2026 ஆகிய நாட்களிலும்
3. தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு, தொழில்நுட்ப பயன்பாடு பற்றி 06.03.2026 நாளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.
4. மாநில அளவிலான முதன்மை பயிற்சியாளர்களுக்கு 24.02.2026 மற்றும் 25.02.2026 ஆகிய நாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக, மண்டல அலுவலர்கள், வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள், வாக்கு சாவடி நிலை அலுவலர்கள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் போன்ற மாவட்ட மற்றும் கள அளவிலான தேர்தல் செயல்பாட்டாளர்களுக்கு பயிற்சிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட அளவிலான பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தற்போதைய அறிவுறுத்தல்களின்படி, அவர்களின் நடைமுறை அறிவை வலுப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 6,803 மண்டல அதிகாரிகள், 75,032 வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள், 2,25,096 வாக்கு சாவடி அலுவலர்கள் உட்பட சுமார் நான்கு லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து நிலைகளிலும் உள்ள தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் முறையாக பயிற்சி பெற்று, தேர்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் திறமையான முறையில் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்தி கொள்வதை உறுதி செய்வதே இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும். “தேர்தல் திருவிழா - தமிழகத்தின் பெருவிழா” என தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளரான அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார்.