சென்னை,
திமுக கூட்டணி இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், பாஜகவையும் அதன் கூட்டணிகளையும் தமிழக மக்கள் மீண்டும் நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்களின் முடிவே இறுதியானது என்கிற கோட்பாட்டின் அடிப்படையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை எஸ்டிபிஐ கட்சி முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறது. இத்தேர்தலில் பெருவெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மற்றும் வெற்றிபெற்றுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும், குறிப்பாகச் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், ஒரு வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்படத் தமிழக மக்கள் வாய்ப்பளித்துள்ளார்கள். அதற்காக எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்னிலத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், களத்தில் உழைத்திட்ட திமுக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தோழமைகளுக்கும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது நன்றியை உரிதாக்குகிறேன். மேலும், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், களத்தில் அயராது உழைத்திட்ட அனைத்து கூட்டணி கட்சித் தோழமைகளுக்கும் எஸ்டிபிஐ கட்சி தனது நன்றியை உரித்தாக்குகிறது. இத்தேர்தலில் தமிழகம் முழுவதும் கூட்டணி வேட்பாளர்களுக்காக எஸ்டிபிஐ கட்சியினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றினர். திமுக கூட்டணி இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், மதவாத அரசியலை முன்வைக்கும் பாஜகவையும் அதன் கூட்டணிகளையும் தமிழக மக்கள் மீண்டும் நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அமையவுள்ள புதிய அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய உண்மையான வளர்ச்சியை நோக்கித் தமிழகத்தைச் சீரிய முறையில் வழிநடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தின் நலன் என்பது மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் அடங்கியுள்ளது. எனவே, அமையவுள்ள புதிய அரசு எந்தவொரு சூழலிலும் ஒன்றிய அரசிடம் மாநில உரிமைகளை அடகு வைக்காமல், தமிழகத்தின் தனித்தன்மையையும் சுயாட்சி அதிகாரத்தையும் நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக மொழி, கலாச்சாரம் மற்றும் நிதிப் பகிர்வு போன்ற அடிப்படை உரிமைகளில் தமிழகத்தின் குரல் இந்திய அளவில் ஓங்கி ஒலிப்பதை புதிய அரசு உறுதி செய்திடல் வேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, விளிம்புநிலை மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்குமான அரசாக இது செயல்பட வாழ்த்துகிறோம். அதே வேளையில், மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களிலும் மாநில உரிமைப் போராட்டங்களிலும் எஸ்டிபிஐ கட்சி எப்போதும் போலத் தனது ஆக்கப்பூர்வமான மற்றும் சமரசமற்ற பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.