தமிழக செய்திகள்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்; வாக்காளர்களுக்கு மேம்பட்ட வசதிகள்: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை

வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களின் வசதிக்காக, வாக்கு சாவடிகளில் கைபேசிகளை ஒப்படைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை

தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களின் வசதியை உறுதி செய்யவும், மேம்பட்ட வாக்குப்பதிவு அனுபவத்தை வழங்கவும் இந்திய தேர்தல் ஆணையம் பல முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

1. வாக்காளர் தகவல் சீட்டை (Voter Information Slip) மேலும் எளிதாக்கும் வகையில், அதில் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பாகம் எண் ஆகியவை தெளிவாக தெரியும் வண்ணம் தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்கு சாவடியை கண்டறிவதும், இதர விவரங்களை தெரிந்து கொள்வதும் எளிதாகும்.

2. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களின் வசதிக்காக, வாக்கு சாவடிகளில் கைபேசிகளை (Mobile Phones) ஒப்படைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியின் நுழைவாயில் அருகே மிகவும் எளிமையான 'புறா கூண்டு போன்ற ' (Pigeon hole) பெட்டி அல்லது சணல் பைகள் அமைக்கப்படும்; அங்கு வாக்காளர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக வைத்து செல்லலாம்.

3. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற 'ECINET’ என்ற ஒருங்கிணைந்த ஒற்றை இணையதளத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதில் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் இணையதளங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாக்காளர்கள் பின்வரும் சேவைகளை பெறலாம், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், வாக்காளர் அடையாள அட்டையில் (EPIC) திருத்தங்கள் மேற்கொள்வது, வாக்குப்பதிவு சதவீத விவரங்களை பார்த்தல், வாக்கு சாவடி விவரங்களை அறிதல் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான உதவிகளை பெறுதல், தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவைகள் ஆகும். ECINET செயலியை கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

4. பணம், மதுபானம், போதை பொருள் மற்றும் இதர தடை செய்யப்பட்ட பொருட்களை கண்காணித்து தடுக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்க குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார்.