சென்னை,
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. முதல் நாளான 20-ந்தேதி கவர்னர் உரை நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு கடந்த 24-ந்தேதி பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதைத்தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டசபை அலுவல்கள் தள்ளிவைக்கப்பட்டன.
தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும்.
தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ந்தேதியன்று தாக்கல் செய்யலாமா? என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இல்லாதபட்சத்தில் பிப்ரவரி 3-ம் வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து 4 நாட்கள் அவையை நடத்தி முடிக்கலாமா? என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ந் தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட இருக்கிறது.
இந்த கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் என்னென்ன?. தேர்தல் நேரம் என்பதால், மக்களை கவரும் வகையில் என்ன அறிவிப்புகளை புதிதாக வெளியிடலாம்? என்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஒப்புதல் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.