சென்னை,
தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. விதிமுறைகள் மீறப்படுவதை குற்றமாக கருத வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக கவர்னர் பிறப்பித்திருந்தார். மேலும் தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு கடந்த 7-ந்தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்தது.
தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கூடுதலாக பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவநிபுணர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். பொதுமுடக்க தளர்வுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.