தமிழக செய்திகள்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டத்துக்கு ஒப்புதல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் 23-ந்தேதி (நேற்று) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018-2030-க்கான ஒப்புதலுக்காக பரிசீலிக்கப்பட்டது. வருவாய் நிர்வாக ஆணையர், இந்தத் தொலைநோக்கு திட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

சென்டாய் கட்டமைப்பு, ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சித் திட்ட இலக்குகள்-2030, பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடும் முன்னுரிமை மற்றும் இலக்குகள், தேசிய பேரிடர் மேலாண்மைத்திட்டம்-2016 மற்றும் பேரிடர் அபாயத் தணிப்பு குறித்து ஆசிய நாடுகளின் மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட பத்து அம்ச செயல் திட்டம் ஆகியவற்றையொட்டி இத்தொலைநோக்குத் திட்டம் அமைந்துள்ளது.

தமிழ்நாடு பற்றிய குறிப்பு, பேரிடர்களால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள், அபாயங்கள் குறித்த மதிப்பீடு மற்றும் அணுகுமுறைகள், நிர்வாக கட்டமைப்பு, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை, இழப்பீடு வழங்குதல் மற்றும் புனர்வாழ்வு, அபாயங்களை தடுக்க மற்றும் தணிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்,

பாதிப்புகளை சீரமைக்கும்போது சிறப்பாக மீண்டும் உருவாக்குதல், பேரிடர் அபாயத் தணிப்பை அடிப்படையாக கொண்டு மாநிலத்தின் இதர வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் அத்திட்டங்களை நெறிப்படுத்துதல், நிதி ஆதாரங்கள், தொலைநோக்குத் திட்டம் போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய திட்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தக்கூட்டத்தின் முடிவில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம்-2005-ன் பிரிவு 23(3)-ன்கீழ், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018-2030-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது