தமிழக செய்திகள்

பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை - ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டுக்கு போன தமிழக அரசு

தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை விதித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

பக்ரீத் பண்டிகை

இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச்செயலாளரான சூர்ய பிரசாத், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பக்ரீத் பண்டிகையையொட்டி பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதாகவும், இது சட்டவிரோதமானது என்பதால், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க காவல்துறைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

மாடுகளை வெட்டக் கூடாது

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு கடந்த மே 27-ஆம் தேதி விசாரித்தது.

அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கால்நடைகளை வெட்ட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு எந்தப் பொது இடங்களிலும் மாடுகளை வெட்டக் கூடாது என்று உத்தரவிட்டது. மேலும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், மாநில காவல்துறை தலைமை இயக்குநரும் (டிஜிபி), மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

இடைக்காலத் தடை

இந்த நிலையில், ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பொது இடங்களில் மாடுகள் மற்றும் கன்றுகளை வெட்டத் தடை விதித்த ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதுவரை அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.