மதுரை,
மதுரை காளவாசல் சாலை சந்திப்பில் நான்கு வழித்தட மேம்பால பணிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று அடிக்கல் நாட்டினர்.
அதன்பின்னர் முதல் அமைச்சர் பழனிசாமி பேசும்பொழுது, அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளது. மதுரை நகரில் காளவாசலில் அமையும் மேம்பாலத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும். மதுரை மக்களின் நீண்ட கால கனவை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி தந்துள்ளது. இதேபோன்று கோரிப்பாளையம் சந்திப்பிலும் மேம்பாலம் கட்டப்படும் என கூறினார்.
வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ரூ.54 கோடியில் அமையவுள்ள இந்த மேம்பாலத்தின் பணிகள் 15 மாதங்களில் நிறைவடையும். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.