தமிழக செய்திகள்

அனைத்து மொழி பேசுபவர்களும் வாழ பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - குஜராத் மந்திரி

அனைத்து மொழி பேசுபவர்களும் வாழ பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று நெல்லையில் நடந்த சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற குஜராத் மந்திரி ருஷிகேஷ் படேல் பாராட்டினார்.

குஜராத் மந்திரி ருஷிகேஷ் படேல் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதுகாப்பான மாநிலம்

பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் இருந்து சவுராஷ்டிரா மக்கள் இடம் பெயர்ந்து தமிழகத்துக்கு வந்தனர். இங்கு தமிழக மக்களோடு இணைந்து, தமிழக மக்களாகவே மாறிய அவர்கள் தொழில், கல்வி, வியாபாரம் என அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகின்றனர். மேலும் சமுதாயத்துக்கு சிறந்த சேவையும் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சவுராஷ்டிரா மக்களை சந்தித்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இந்தியாவில்தான் இருக்கின்றன. நாம் ஒருவரோடு ஒருவர் நட்புடன் பழக வேண்டும். தமிழகம், குஜராத் மாநிலங்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை இரு மாநிலத்தவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காகவும், தொழில், வியாபார ரீதியாக தொடர்பு வைத்து கொள்ளவும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் ஆகும். இது அனைத்து மொழி பேசுபவர்களும் வாழ்வதற்கு பாதுகாப்பான, அமைதியான மாநிலம் ஆகும். தமிழக மக்கள் நட்பை பேணுவதிலும், வரவேற்பதிலும் சிறந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்

முன்னதாக குஜராத் மாநில அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ஓட்டல் அரங்கத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற்றது. தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மை சவுராஷ்டிரா கூட்டமைப்பு மாநில தலைவர் எஸ்.ஆர்.அனந்தராமன் தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை சவுராஷ்டிரா சபா தலைவர் ஜோதி கிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

குஜராத் மாநில சுகாதாரம், குடும்பநலம், கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல், சவுராஷ்டிரா பல்கலைக்கழக துணைவேந்தர் கிரிஷ்பாய் பிமாணி, குஜராத் மாநில மேஷனா மாவட்ட கலெக்டரும், திருச்சியைச் சேர்ந்தவருமான நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

குஜராத்துக்கு 3 ஆயிரம் பேர் அழைத்து செல்ல...

மேஷனா மாவட்ட கலெக்டர் நாகராஜன் பேசுகையில், ''காசி தமிழ் சங்கமம் விழா நடத்தப்பட்டதைப் போன்று நெல்லையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி 3 ஆயிரம் சவுராஷ்டிரா மக்கள் குஜராத் மாநிலத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கு நடைபெறும் 15 நாட்கள் நிகழ்ச்சியில் அவர்களுக்கு பல்வேறு இடங்கள் சுற்றி காண்பிக்கப்படுகிறது" என்றார்.

சவுராஷ்டிரா மத்திய சபா துணைத்தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர். விழாவில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தயாசங்கர், கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த சவுராஷ்டிரா சமுதாய மக்கள் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை சவுராஷ்டிரா செயலாளர் ராம்தாஸ் நன்றி கூறினார்.