தமிழக செய்திகள்

தொழில், வணிக வளர்ச்சியால் வங்கிக் கடன் பெறுவதில் தமிழ்நாடு முதலிடம்

நாட்டின் மொத்த வங்கிக் கடனில் 5 மாநிலங்களே 75 சதவீதத்துக்கும் அதிகமான கடனை பெறுகின்றன.

சென்னை,

தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவில் வங்கிக் கணக்குகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், வங்கிக் கடன் பெறுவதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக புதிய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மாவட்ட வாரியான கடன் மற்றும் வைப்புத் தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் மொத்த வங்கிக் கடனில் 27.76 சதவீத பங்கு தமிழ்நாட்டுக்கே செல்கிறது என்பது தெரிய வந்துள்ளது. மாநில வாரியாக கணக்கிடப்பட்ட தேசிய கடன் சதவீதத்தில், தமிழ்நாடு 27.76 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக மராட்டியம் 27.70 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 8.81 சதவீதம், குஜராத் 5.64 சதவீதம், தெலுங்கானா 5.12 சதவீதம் என்ற அளவில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த 5 மாநிலங்களே நாட்டின் மொத்த வங்கிக் கடனில் 75 சதவீதத்துக்கும் அதிகமான கடனை பெறுகின்றன.

தொழில், வணிக வளர்ச்சி

தமிழ்நாட்டின் இந்த முன்னணிக்கு சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், சேலம், திருச்சி உள்ளிட்ட தொழில் மற்றும் வணிக மையங்களின் வளர்ச்சியே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி ஏற்றுமதி, தோல் பொருட்கள், பொறியியல் தொழில்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துறைமுக வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதால், தொழில் மற்றும் வர்த்தகக் கடன்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.

2015-ம் ஆண்டு முதல் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 54 கோடிக்கும் மேற்பட்ட புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 60 சதவீதம் பெண்களின் பெயரில் உள்ளன. யூ.பி.ஐ. மூலம் தினசரி 70 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. ஆனால், வங்கிக் கடன் வினியோகம் நாடு முழுவதும் சமமாக பரவவில்லை என்பது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாகும்.

762 மாவட்டங்கள்

2025-26-ம் நிதியாண்டின் 3-வது காலாண்டு நிலவரப்படி, நாட்டின் 762 மாவட்டங்களில் வெறும் 11 மாவட்டங்கள் மட்டும் இந்தியாவின் மொத்த வங்கிக் கடனில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கடனை பெற்றுள்ளன. அதில் மும்பை, மும்பை புறநகர் மற்றும் புதுடெல்லி ஆகிய 3 மாவட்டங்கள் மட்டும் 30.3 சதவீத கடனைப் பெற்றுள்ளன.

மேலும், முதல் 7 மாவட்டங்கள் சேர்ந்து 43.4 சதவீத கடனைப் பெற்றுள்ளன. மறுபுறம், நாட்டின் கீழ்மட்ட 381 மாவட்டங்கள் சேர்ந்து வெறும் 4.9 சதவீத கடனை மட்டுமே பெற்றுள்ளன. இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.