போடி:
தேனி மாவட்டம் போடி நகர் எஸ்.எஸ்.புரத்தில் வசிப்பவர் அங்குவேல்.
இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் போடி நகர தலைவராக உள்ளார். இவர் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார்.
இவருடைய வீட்டுக்கு மதுரை வருமான வரித்துறை உதவி ஆணையர் பூவலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று வந்தனர்.
அவருடைய வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
சோதனையை தொடர்ந்து வருமான வரித்துறையினர் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக ஒரு புகார் வந்தது.
அந்த புகாரின் பேரில் சோதனை நடத்தினோம். ஆனால், பணம் எதுவும் சிக்கவில்லை என்றனர்.
இதுகுறித்து அங்குவேலிடம் கேட்டபோது, அ.தி.மு.க. கூட்டணியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறேன்.
எதிர் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் இந்த சோதனை நடந்துள்ளது. எனினும் வருமான வரித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன் என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
போடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
இந்த சூழலில் த.மா.கா. நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது போடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.