சென்னை,
மீனாட்சி கோவில் குடமுழுக்கில் தமிழ் மரபு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் மகா குடமுழுக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழரின் வரலாறு, பண்பாடு, கலை, கட்டடக்கலை மற்றும் சைவ மரபின் பெரும் அடையாளமாகத் திகழும் இத்திருக்கோயிலின் குடமுழுக்கு நிகழ்வில், தமிழ்ச் சமய மரபுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பாகும்.
இந்தக் கோரிக்கை வெறும் மொழி உணர்வு சார்ந்த ஒன்றல்ல. தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட தமிழ்ச் சைவப் பக்தி இலக்கியங்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழரின் இறைநெறியோடு பின்னிப் பிணைந்தவை. எனவே, மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் நமது தமிழ் மரபு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.
இவ்விவகாரம் தொடர்பான வழக்கில், சென்னை ஐகோர்ட் மதுரை கிளை, சமஸ்கிருத வேதங்கள் ஓதப்படும் இடங்களிலேயே தமிழ்த் திருமுறை ஓதுவார்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குடமுழுக்கின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் அவர்கள் தமிழ்த் திருமுறைகள் மற்றும் சைவ மந்திரங்களை ஓத அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, செப்டம்பர் 9-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கடந்த காலங்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்குகளில் தமிழ் மந்திரங்களை ஓதிய ஓதுவார்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், இம்முறையும் உறுதி செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, கருவறை வழிபாடு, யாகசாலை நிகழ்வுகள், கோபுரக்கலச நன்னீராட்டு உள்ளிட்ட குடமுழுக்கின் முக்கியத் தருணங்களில் தமிழ் ஓதுவார்களின் பங்களிப்பு வெறும் பெயரளவில் இல்லாமல், நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள வகையில் நடைமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும்.
நமது தாய்மொழியின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கு நீதிமன்றத்தின் கதவைத் தட்ட வேண்டிய சூழல் இனியும் நீடிக்கக் கூடாது. கோவில்களின் வழிபாட்டு மரபுகளில் தமிழுக்கு வழங்கப்பட வேண்டிய இடம் குறித்து, அரசு தெளிவான நிரந்தர நடைமுறையை உருவாக்க வேண்டும்.
தமிழில் இறைவனைப் போற்றிய நாயன்மார்களின் பக்திப் பாரம்பரியம் வாழும் மண்ணில், தமிழ்த் திருமுறைகள் ஒலிப்பது எந்த வகையிலும் புறக்கணிக்கப்படக் கூடிய ஒன்றல்ல. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைய வேண்டுமானால், சடங்குகள் முறையாக நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்ச் சைவ மரபின் குரலும் அதில் முழுமையாக ஒலிக்க வேண்டும்.
எனவே, நீதிமன்ற உத்தரவின் உணர்வை முழுமையாகக் கடைப்பிடித்து, தமிழ் ஓதுவார்களுக்கு உரிய இடம், வாய்ப்பு, மரியாதை ஆகியவற்றை உறுதி செய்யுமாறும், குடமுழுக்கு நிகழ்வுகளில் தேவாரம், திருவாசகம், திருமுறைகள் உள்ளிட்ட தமிழ்ச் சைவ மரபுகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குமாறும் தமிழ்நாடு அரசையும் இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.