சென்னை,
தி.மு.க.வின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரையின் கீழ், சென்னை மேயரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆர்.பிரியா, திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி, 74-வது வட்டத்தில் வீடுவீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் பெண்களுக்கு எடுத்துரைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கழக மகளிரணி சார்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் தேர்தல் பரப்புரையானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் ஸ்டாலினின் மகளிர் படை உறுப்பினர்கள் நேரடியாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள், திட்டங்களை மகளிருக்கு எடுத்துரைத்து பரப்புரை செய்து வருகின்றனர்.
சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க.நகர் வடக்கு பகுதி 74-வது வட்டத்தில் தலைமை கழக செயற்குழு உறுப்பினர்/மேயர் அவர்கள் "வெல்லும் தமிழ் பெண்கள்" பரப்புரையை 74அ வட்டத்தில் பாகம் 46,47 ஆதிசேஷன் நகர் 1 முதல் 6 தெருக்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கழக தலைவர் அவர்களின் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கியும், இல்லத்தில் உள்ள பெண் வாக்காளர்களிடம் தமிழக அரசின் திட்டங்கள் மூலம் பயன் பெற்று வருவது குறித்தும் கேட்டறிந்தும் பரப்புரை மேற்கொண்டார்.
ஸ்டாலினின் மகளிர் படையினர் பரப்புரையின்போது, மேயர் பிரியா திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் மட்டுமல்லாது, பெண்களின் சம வாய்ப்பு, சம உரிமைக்கும், முன்னேற்றத்திற்கும் திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகளையும் பட்டியலிட்டு குறிப்பாக மகளிர்களுக்கு விடியல் பயணம் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாப் பயணம், அரசுப் பள்ளியில் பயின்று உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1,000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், கோடை காலத்தில் மகளிருக்கு ஆண்டு தோறும் ரூபாய் 2,000/- சிறப்பு நிதி வழங்கும் புதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்களுக்கு எடுத்துரைத்தார்.
அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40% ஆக அதிகரிக்கப்பட்டது, உள்ளாட்சியில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தியது, பெண்கள் வாங்கும் பத்து லட்சம் வரையிலான சொத்துக்கு 1% பத்திரப்பதிவு கட்டணவிலக்கு, பெண் ஓதுவார்கள் நியமனம் என பல்வேறு புதிய முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு மகளிருக்கான அரசியல், அதிகாரத்தையும், நியாயமான உரிமைகளையும் உறுதி செய்துள்ளது, போன்ற சமூக நிதி திட்டங்களையும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரையின் போது, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீட்டினை திராவிட மாடல் அரசு செயல்படுத்தியதன் மூலம் 11 பெண்கள் முதன்முறையாக அரசியல் அதிகாரமிக்க மேயர் பதிவியினை தற்போது பெற்றுள்ளனர். அதேபோல கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கான அரசியல் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளதையும் சென்னையின் முதல் பெண் மேயரான பிரியா, வீடு வீடாகச் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி பரப்புரை செய்தார். இந்நிகழ்வில் 74-வது வட்டக் கழக செயலாளர் ஜி.கிருஷ்ணகுமார், வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரைக்கான மகளிர் படைகள் உடனிருந்தனர்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.