தமிழக செய்திகள்

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள்: 11-ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் பேரணி

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 11-ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் பேரணி நடக்கிறது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

டாஸ்மாக் நிறுவனத்தில் தமிழ் நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான, பணி நிரந்தரம் செய்வது, போதுமான ஊழியர்கள் நியமனம் செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் கண்டித்தும்; பணியாளர்கள் நலன் கருதி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும்,

அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் 11.2.2026 (புதன்கிழமை) காலை 10 மணியளவில், முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி தலைமையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையில், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணியாகச் சென்று கண்டனக் குரல் எழுப்பி, நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும்.

அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள இந்தப் பேரணியில், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் பல்வேறு இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பணியாளர்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தப் பேரணியில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.