தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

கோழி மேக்கனூர் அடுக்குமாடி குடியிருப்பு முன்புள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கோழி மேக்கனூர் அடுக்குமாடி குடியிருப்பு முன்புள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கோரிக்கை மனு

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறறார். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோழிமேக்கனூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது:-

கோழிமேக்கனூர் கிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் 168 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது பொதுமக்கள் அனைவரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு முன்பு அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது அந்தகடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சண்டை சச்சரவுகள்

இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் குடியேறி ஒரு வருடம் ஆகியும் அந்த குடியிருப்பு முன்பு உள்ள டாஸ்மாக் கடை இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் குடியிருப்பில் வசித்து வரும் பெண்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கடையின் முன்பு சாலையிலேயே அமர்ந்து மது அருந்துவதால் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடந்து வருகிறது.

இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் ரோந்து பணி வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அந்த அரசு டாஸ்மாக் கடையை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.