ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள், விமான சேவை, விரிவாக்கம் குறித்து விமான நிலைய ஆலோசனை குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு விமான நிலைய ஆலோசனை குழு தலைவரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. தலைமை தாங்கினார்.
சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, சென்னை மாநகராட்சி, விமான நிலைய ஆணையக, போலீஸ், மத்திய தொழிற்படை, சுங்கத்துறை, குடியுரிமை உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் 1.7 கோடி பயணிகளில் இருந்து 3.5 கோடி பயணிகளை கையாள்வதற்கான திறன் உயர்த்தப்படுகிறது. இதற்கு முனையங்கள் மற்றும் விமான ஓடுபாதைகள் பகுதிகளிலும் பணி நடந்து வருகிறது. அதற்கு கூடுதலான நிலம் தேவைப்படுகின்றன. எனவே நிலம் கையகப்படுத்துவதற்கு மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய வருவாய் துறை, ராணுவம், உள்ளாட்சி துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் என அனைத்து துறை அடங்கிய குழு அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.