தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பி.கே.சேகர்பாபு கோவில்களின் சொத்துகள், ஆவணங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் முதலான அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டு உள்ளார். அமைச்சரின் இந்த செயல்பாட்டை இந்து முன்னணி மனதார வரவேற்கிறது. நவீன காலத்தில் பத்திர பதிவு, நீதித்துறை போன்ற துறைகள் கம்ப்யூட்டர்மயமாக மாற்றப்பட்டு உள்ளது. அதுபோல, இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து செயல்பாடுகளும், சொத்துகளும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அதே சமயம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த செயல்பாடு முடிக்க வேண்டும் என்ற திட்டமிடல் இருந்தால் தான் அது பயன்தரும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது நம்பிக்கை வைத்து, அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளார். அதனை சீரிய முறையில் பயன்படுத்தி, இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள சீர்கேடுகளை களைந்து, சிறப்பாக செயல்பட்டு முத்திரை பதிக்க அமைச்சரை, திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.